சகோதரர் ராயிக் ரித்வான்
யூதர்களுடைய மதத்தின் முக்கியமான கோட்பாடுகள் அவர்கள் ‘பத்து
கட்டளைகள்’ என அழைக்கும் செய்திகளை மையமாகக் கொண்டிருக்கிறது.
குர்’ஆன் பத்து கட்டளைகள் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது
என உறுதி செய்கிறது. கிறிஸ்தவர்களும் பத்து கட்டளைகளில் நம்பிக்கை
வைத்துள்ளார்கள். இஸ்ரவேலர்கள் வழி பிறழ்ந்து, வழிகாட்டுதல்
தேவைப்பட்ட நேரத்தில் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அதே போல, முஸ்லிம்களாகிய நாமும் வழி தவறி, வழி காட்டுதல்
தேவைப்படும்போது, நமக்கும் இவை பாடமாக இருக்கும்.
யூத, கிறிஸ்தவ இலக்கியங்கள் ‘கட்டளைகள்’ என அழைப்பவைகளுக்கு அரபி
பெயர் ‘வஸியா’ – இதன் நேரடி பொருள், ‘உயில்’. இது நபிமார்கள் தங்களைப்
பின்பற்றுபவர்களுக்கு விட்டுச் சென்ற ‘உயில்’ போன்றது தான். ஒரு உயில்
அல்லது மரணசாசனம் என்பது ஒருவர் தன் மரணத்திற்குப் பின் தன் வாரிசுகள்
பின்பற்ற வேண்டியவைகளை அடக்கியிருக்கும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், ‘யார் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் தன் முத்திரையை இட்டுள்ள மரணசாசனத்தை அறிந்து கொள்ள
விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய வாக்கைப் படிக்கட்டும்…,’ என கூறி
விட்டு, மூன்று இறைவசனங்களை ஓதினார்கள். [திர்மிதி] நம் அன்புக்குரிய
நபிகளார் (ஸல்) அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற செல்வம் இந்த உயில்
தான்.
இப்பொழுது, அவை என்னவென்று பார்க்கலாம்? அல்லாஹ், தன் பத்து
கட்டளைகளை சூரத்துல் அன்’ஆமின் 151-153 வசனங்களில் குறிப்பிடுகிறான்.
1. எதையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். முதல் கட்டளை, எல்லா நபிமார்களும்
முதலில் எதைச் சொன்னார்களோ அது தான். நம்முடைய நம்பிக்கை, சொற்கள்,
செயல்கள் எதிலும் அல்லாஹ்வுக்கு எவரையும் இணை கற்பிக்கக்கூடாது. அல்லாஹ்
மட்டுமே இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, பரிபாலிப்பவன், நன்மைகளின் பிறப்பிடம்
அவனே, அவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று நம்புதல். இந்த நம்பிக்கைக்குத்
தேவையானது, நாம் அவனுடைய எந்த படைப்புகளிடமிருந்தும் இல்லாமல், அவனிடம்
மட்டுமே உதவி தேடுவது. அல்லாஹ், தேவைகள் அற்றவன், நாம் அவனுக்கும் நமக்கும்
இடையே எதையும் நுழைக்கக் கூடாது.
2. பெற்றோரிடம் நன்முறையில் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நெருங்குவதற்கான
வழிகளில் ஒன்று, நம் பெற்றோரிடம் நன்முறையில் நடந்து கொள்வது. ஒரு குறிப்பிட்ட
வயது வரை நம் பெற்றோர்களுடன் நாம் வாழ்கிறோம். அதனால், சில சமயங்களில்
நமக்குள் மனத்தாங்கல்கள் வரக்கூடும். ஆனால், அல்லாஹ் (சுபஹ்) அவனை மட்டும்
வணங்குவதுடன், பெற்றோரிடம் நன்முறையில் நடந்து கொள்வதைப் பற்றியும்
கூறுகிறான். அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், பெற்றோர்கள் நம்முடைய
அன்புக்கும், விசுவாசத்திற்கும் உரிமையுடையவர்கள். மேலும், முதல் கட்டளையுடன்
சேர்த்து பார்க்கும்போது, பெற்றோரிடம் நல்முறையில் நடந்து கொள்வது நம்முடைய
எண்ணங்களைத் தூய்மைப் படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. ஏனென்றால்,
நாம் பெற்றோருக்கு செய்யும் செயல்கள் மற்றவர்களால் காணப்படுவதில்லை. மேலும்,
அவர்களுக்கு நாம் எத்தனை செய்தாலும் அது ‘போதுமானதாக’ இருக்காது.
3. வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – உங்களுக்கும்,
அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். குறிப்பாக, அல்லாஹ் (சுபஹ்)
குழந்தைகளைக் கொல்வதை குறிப்பிடுகிறான். ஆனால், அதில் அல்லாஹ் நம்
அனைவருக்கும் அறிவிக்கும் செய்தி புதைந்துள்ளது. சிரம காலங்களில், அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை வைப்பதும், காரியங்கள் நடக்க முடியாதவைகளைப் போல்
தோன்றும்போது கூட, அல்லாஹ்(சுபஹ்)வை உறுதியாக நம்புவது. அல்லாஹ்
உணவளிப்பான் – அது அவனுடைய வாக்கு, அவன் நிச்சயம் வாக்கு மீற மாட்டான்.
4. மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள், வெளிப்படையான. . .
5. . . .அல்லது இரகசியமானவை. இது வெளிப்படையான மற்றும் ரகசியமான
பாவங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பதற்கு ஒரு தெளிவான கட்டளை..
6. அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை
செய்யாதீர்கள். மனித உயிர் புனிதமானது என அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.
இஸ்லாமின் பெயரால் செய்யப்படும் நியாயமற்ற கொலைகள் அல்லது
அங்கசேதங்களைத் தடை செய்கிறது.
7. அனாதைகளின் பொருட்களிலிருந்து, தூய எண்ணங்களுக்காக அன்றி, அவர்கள் பருவம்
வரும் வரை விலகி இருங்கள். இந்த கட்டளை குறிப்பாக அனாதைகள் பற்றியது,
ஆனாலும், அது சமுதாயத்தில் பலவீனமானவர்களின் உரிமைகளை மதிப்பதையும்
குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களுடைய ஜொலிக்கும் குணங்களில் ஒன்று, யாரும்
அக்கறையெடுத்துக் கொள்ளாதவர்களின் உரிமைகளுக்காக எப்போதும்
போராடினார்கள். எப்படியிருந்தாலும், அவர்கள் ஒருபோதும், அனாதைகளை,
யாசிப்பவர்களை அல்லது, நாம் ‘கீழ்நிலையில்’ உள்ளவர்கள் என்று நினைக்கும்
யாரையும் தாழ்வாக மதித்ததில்லை. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் கொடுத்து விட
வேண்டும். அதன் பின், நம்மால் எத்தனை முடியுமோ அந்த அளவு உதவி செய்ய
வேண்டும்.
8. அளவு, நிறுவையில் முழுதாக, நியாயமாக அளந்து கொடுங்கள் – நாம் எந்த
ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேல் சோதிக்க மாட்டோம். மனிதர்களிடம் நடந்து
கொள்ளும் முறையில் நேர்மையைக் கடைபிடிக்கும்படி அல்லாஹ் நம்மை
வலியுறுத்துகிறான்.
9. நீங்கள் பேசும்போது, உங்களுடைய உறவினர் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும்,
நியாயமானதையே பேசுங்கள்.
10. அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் செய்யும் எந்த சத்தியத்தையும்
நிறைவேற்றுங்கள். அதன் பின், அல்லாஹ் நம்மை நீதமாக நடந்து கொள்ளும்படியும்,
சத்தியங்களை நிறைவேற்றும்படியும் கூறுகிறான்.
பத்து கட்டளைகளைக் குறிப்பிட்ட பின் அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள்
-இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் -அவை உங்களை அவனுடைய
வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி )
பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
வாழ்க்கைப் பயணத்திற்கு இந்த கட்டளைகளே நமக்குப் போதுமானவைகளாக
இருக்கின்றன. அல்லாஹ் அவற்றை நமக்கு தொகுத்துக் கொடுத்திருக்கிறான்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இது நாம் அல்லாஹ்விடமும், நம்மைச் சுற்றி
இருப்பவர்களிடமும் நடந்து கொள்ளும் விதம். நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள், “நான் நற்குணத்தை முழுமை செய்யவே அனுப்பப் பட்டுள்ளேன்.”
[அஹமது]அல்லாஹ்(சுபஹ்)வுடைய கட்டளைகளை நிறைவேற்ற அல்லாஹ்விடம்
உதவியையும், சக்தியையும் கேட்கிறோம். அல்லாஹ்வின் கட்டளைகளை
நிறைவற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியவற்றில் ஒரு பகுதி, குர்’ஆனின்
மொழியைக் கற்றுக் கொள்வது. அவனுடைய வேதத்தைப் படிப்பதற்கு உங்கள்
பயணத்தை இன்றே தொடங்குங்கள்!